History

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில் வரலாறு

குலகுரு மரபு - ஓர் அறிமுகம்

குரு

குரு என்றால் இருளை விலக்குபவர் என்று பொருள். குரு, ஆச்சாரியர், உபாத்தியாயர் என்ற சொற்கள் வெவ்வேறு பொருள் கொண்டவை; ஆனால் தற்காலத்தில் ஒரே பொருளில் பார்க்கப்படுகின்றன. உபாத்தியாயர் கடமை கற்பிப்பதோடு முடிகிறது. ஆச்சாரியர் தான் கடைபிடிப்பதை, சோதித்து கற்பிக்கிறார். ஆனால், குருவானவர் சொல், செயல், ஸ்பரிசம், திருஷ்டி, சித்தம் போன்றவற்றால் அஞ்ஞானத்தை விலக்கி ஞானத்தை அருளவல்லவர். சிஷ்யனின் வாழ்வு முழுவதற்குமான ஞானத்தையும், நல்லருளை வழங்கி வழிநடத்தக் கூடியவர். ரத்த பந்தம் இல்லாமலேயே வாழ்வின் அனைத்து அம்சங்களும் பூரணமடைய வழிகோளுபவர். குருவே பிரம்மாவாக, விஷ்ணுவாக, சிவமாக அருள வல்லவர். குருவின் ரூபத்தில் மும்மூர்த்திகளையும் நாம் தரிசிக்கலாம். இந்த கருத்தை வேதங்களும், திருமூலர் திருமந்திரமும் பல இடங்களில் மாறாமல் செப்புகின்றன.

“குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு

குருர் தேவோ மகேச்வர:

குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்மா

தஸ்மை ஸ்ரீகுரவே நம:”

“குருவே சிவம் எனக் கூறினன் நந்தி

குருவே சிவம் என்பது குறித்தோரார்

குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்

குருவே உறையுணா பெற்றதோர் கோவே”

மாதா பிதா குரு தெய்வம் என்று வரிசைப்படுத்தி சொல்வதில், மாதாவின் மூலம் பிறப்பும், பிதாவின் மூலம் குலமும், அதனாலே குலகுருவும், குலதெய்வமும் வாய்க்கப் பெறுகிறோம் என்பதே பொருளாகும்.

குலகுரு

சிஷ்யர்களின் குலவம்சத்திற்கே குருவாக இருந்து அனுக்கிரகம் செய்பவர் குலகுரு எனப்படுவார். தனது ஆச்சார அனுஷ்டான மேன்மையாலும், வேத வேதாந்த சாஸ்திர ஞானத்தாலும் தெய்வ சித்தியாலும் சிஷ்யர்கள் குலத்தின் நல்வாழ்வு, தெய்வ கடாட்சம், ஆயுள் ஆரோக்கியம், ஆட்சியுரிமை, தொழில் விருத்தி, வம்ச விருத்தி பெருகவும் கற்பு நெறி, தர்மநெறி நிலை பெறவும் அனுதினமும் சிந்தித்து, கற்று, கற்பித்து, ஹோமங்கள், பூஜைகள் செய்துவருபவராவார்.

குழந்தைப்பேறு பெற்ற கோடிக்கணக்கான தாய் தந்தையர் உலகம் முழுதும் இருப்பினும் நம்மை பெற்ற தாய்தந்தையரே நமக்காக வாழ்வர், அவர்களை தொழுது வாழ்தல் பெரும்புண்ணியம். ஆயிரம் தெய்வங்கள் இருப்பினும் குலதெய்வமே ஒரு மனிதனுக்கு முன்னின்று காக்கும். அதுபோல நாம் ஆயிரம் ஞானிகளை பின்பற்றினாலும், பல தலைமுறைகளாக நம்முடைய குலம் செழிக்க வேண்டியே வாழ்ந்து வந்த குலகுருக்களே நமக்கு முதன்மையானவர்களாவர்.

குலகுரு மரபின் தொன்மையை நோக்கினால் இதிஹாச, புராண காலம்தொட்டே இம்மரபு பின்பற்றப்பட்டதை அறியலாம். தேவர்கள், அசுரர்கள் தோன்றிய காலத்திலேயே அவரவர் குலகுருக்கள் தோன்றி தத்தமது சிஷ்யர்களைக் காத்துள்ளனர். தேவர்களுக்கு குரு பிரகஸ்பதியும், அசுரர்களுக்கு குரு சுக்ராச்சாரியாரும் குலகுருவாக இருந்து அவர்கள் சிஷ்யர்கள் மேன்மைக்காக பாடுபட்டதை பாகவதம் உள்ளிட்ட பல்வேறு புராண வரலாறுகள் மூலம் அறியலாம். சூர்ய வம்சத்துக்கு குலகுருவாக வசிஷ்டரும், சந்திர வம்சதிற்கு குலகுருவாக குரு கிருபரும் இருந்துவந்ததை ராமாயணம் மகாபாரதம் வாயிலாக அறியமுடியும்.

அதுபோல, இன்றளவும் தொன்மையும், பாரம்பரியமும் மிகுந்த வம்ச வரலாறுகள் கொண்ட சமூகத்தினருக்கு குலகுரு பாரம்பரியம் இருப்பதை பாரதம் முழுக்கவே பல்வேறு சமூகங்களை உற்று நோக்கும்போது அறிய முடியும்.

சிஷ்யர்கள் கடமைகள்

 • குலகுருக்கள் ஆசிர்வாதம் குடும்பத்துக்கும் வம்சத்துக்கும் மிகவும் நல்லது. வருஷமொருமுறையேனும் குருஸ்வாமியை தரிசித்து ஆசி பெறுதல் வேண்டும்.
 • மங்கள வாழ்த்தில் கூறியுள்ளபடி, கல்யாண பத்திரிக்கைகளை காணியாச்சி கோயில்களுக்கு வைப்பது போல தவறாது குலகுருக்களுக்கும் வைத்து அழைக்க வேண்டும்.
 • சிஷ்யர்களின் காணியாச்சி கோயில், உரிமை கோயில்கள் விசேஷங்களுக்கு பாரம்பரிய முறைப்படி குலகுருக்களை முன்னிறுத்தி செய்விக்க வேண்டும்.
 • மடத்தின் அன்றாட ஆத்மார்த்த பூஜைகளுக்கு அவசியமான தேங்காய், பழம், எண்ணெய், பச்சரிசி, நாட்டுசர்க்கரை, நாட்டுப்பசும்பால், நாட்டுப்பசுநெய், சாம்பிராணி போன்ற பூஜைப் பொருட்களை வழங்க வேண்டும்.
 • தெய்வ சாநித்யமும், சாஸ்திர ஞானமும் பெற்ற குருஸ்வாமிகள் வசம் ஆன்மீக வழிகாட்டல்களுக்கும், மனம் சஞ்சலமான காலங்களில் அவசியமான ஆலோசனைகளுக்கும் குலகுருக்களிடம் உபதேசம் பெற்று மனம் தெளிவுறலாம்.
 • வருஷம் ஒருமுறையேனும் தவறாது குருஸ்வாமிகளை தத்தமது கிராமங்களுக்கோ, கோயில்களுக்கோ சஞ்சாரம் செய்ய வரவேற்று பூஜைகள் செய்வித்து, உபதேசங்கள் கேட்டு, சஞ்சார காணிக்கை செலுத்த வேண்டும். மடத்திற்கான தலைக்கட்டு வரியை தவறாது செலுத்துதல் வேண்டும். மடத்திலும் சரி, சஞ்சாரத்தின் போதும் சரி தீபாராதனை தட்டில் பணம் போடுவது கூடாது. வழிபாட்டின் பின் நாம் மடத்திற்கு செலுத்தவேண்டிய காணிக்கை மற்றும் வரியை தேங்காய் பழத்துடன் வைத்துக் கொடுக்க வேண்டும்.
 • கொங்கு வேளாளர் பொருளீந்த குலகுரு
 • ஸ்ரீ சிதம்பர சுவாமிகள்,
 • ஸ்ரீ இம்முடி சிற்றம்பல நாயனார்,
 • அருணகிரி அய்யம்பாளையம்,
 • கந்தம்பாளையம் (வழி),
 • திருச்செங்கோடு,
 • நாமக்கல் (DT).
 • தொடர்புக்கு : +91 94428 63234